"இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது'' என, சவுரப் திவாரி தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 15 ம் தேதி இலங்கையில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதில், சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்திய சவுரப் திவாரி வாய்ப்பு பெற்றுள்ளார். ஜார்க்கண்டை சேர்ந்த 20 வயது இளம் வீரரான திவாரி, தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய "ஏ' அணிக்காக விளையாடி வருகிறார்.
தோனிக்குப் பின், ஜார்க்கண்ட மாநிலத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் சவுரப் திவாரி. கடந்த 2009 ம் ஆண்டு ஜார்க்கண்ட் அணி சார்பில் ரஞ்சி கோப்பையில் பங்கேற்ற சவுரப் திவாரி, 5 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் விளாசினார். அதற்குப் பின் மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற திவாரி, 419 ரன்கள் எடுத்து அசத்தினார். மேற்கண்ட செயல்பாடுகளின் அடிப்படையில் திவாரிக்கு, ஆசிய கோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

